EN
Local

பிள்ளையான் விவகாரம் தொடர்பில் CID அழைப்புக்காக காத்திருக்கிறேன் – நாமல் ராஜபக்ஷ

நாமல் ராஜபக்ஷ, “பிள்ளையான்” தொடர்பான வாக்குமூலம் பெறுவதற்காக தன்னை அழைக்கும் வரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்புக்காக காத்திருக்கிறேன் எனவும், அதேவேளை விசாரணை அதிகாரிகளிடம் தாமும் பல கேள்விகளை எழுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்தில் எந்த அரசியல் கட்சிகளையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற மனநிலையுடன் செயற்படுகிறது. எமது தரப்பில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் அதற்கு அச்சப்பட வேண்டியதில்லை.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் ஆணை உள்ளது என்று மட்டும் கூறாமல் தேர்தலை நடத்தி அதை நிரூபிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்துகிறேன்.

“பிள்ளையான்” தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக CID அழைக்கும் வரை காத்திருக்கிறேன். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை தூதரகத்துக்கு அழைத்து எப்படி பேச முடியும் என்பதும் கேள்விக்குறியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

புத்தசாசனத்தை அவமதிக்கும் வகையில் சில தரப்புகள் திட்டமிட்டு செயற்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். அட்டமஸ்தான தேரர் விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை எனவும், இந்த விடயத்தை அரசியலாக்குவது தவறு என்றும், இதற்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button