நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Durairasa Ravikaran இன்று (18) நந்திக்கடலில் உயிர்நீத்த உறவுகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நந்திக்கடல் பகுதியில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், உயிரிழந்தோரின் நினைவாக சுடரேற்றி, மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்,
“எங்கள் வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌன சாட்சியாக இந்த நந்திக்கடல் உள்ளது. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம்” என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயம் பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
இந்த நினைவேந்தல் மற்றும் ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா மற்றும் இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.




