அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இது உயர்ஸ்தானிகரின் முதல் கிழக்கு மாகாண விஜயம் ஆகும்.
இந்தச் சந்திப்பில், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு, கடல்சார் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, சுற்றுலா, மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளின் மேம்பாடு ஆகிய விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
மேலும், மாகாணத்தின் காணி தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ், மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் இணைந்து காணிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்தி வருவதாக ஆளுநர் இதன்போது விளக்கமளித்தார்.
அத்துடன், இலங்கையின் கைத்தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இருதரப்பும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டன.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவாக இருப்பதாகக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாணத்துடன் எதிர்காலத்தில் நெருக்கமாக இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




