EN
Local

“சங்கமம் 2026” – 5,000 பரதநாட்டியக் கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை

சங்கமம் குளோபல் அகடமி மற்றும் சங்கமம் லியா ஹொலிடேஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற “சங்கமம் 2026” நிகழ்வில், 5,000 பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு 10,000 கால் சலங்கைகளை ஒரே தாளத்தில் ஒலிக்கச் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

இந்தியாவில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும், அவரது வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரிலும், இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமி மற்றும் இலங்கையின் சங்கமம் லியா ஹொலிடேஸ் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இன்று காலை காலி முகத்திடல் தமிழ் கலாசாரப் பெருமையின் அடையாளமாக மாறியது. கடல் அலைகளின் ஓசையை விட ஆயிரக்கணக்கான சலங்கைகளின் ஒலி ஓங்கி ஒலித்தது. பரதநாட்டியத்தின் நுணுக்கம், ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கலைஞர்களை பாராட்டி, “இலங்கை மண்ணில் தமிழ் கலையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய இந்த தருணம், முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்” என்று தெரிவித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நேரில் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர். சலங்கைகளின் ஒலியால் அதிர்ந்த கடற்கரை, இலங்கைத் தமிழர்களின் கலைத் திறமைக்கு ஒரு சான்றாக அமைந்தது.

“சங்கமம் 2026” நிகழ்வு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததை உறுதிப்படுத்தும் சான்றிதழ், கின்னஸ் உலக சாதனை அமைப்பினால் பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை இலங்கையில் நடத்துவதற்கு வழிவகுத்த பிரதி அமைச்சருக்கு, கலந்து கொண்ட பெற்றோர்களும் மாணவர்களும் நன்றியைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இதுபோன்ற கலாசார நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Back to top button