அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘புளூமெண்டல் சங்கா’, ‘மோதர நிபுன்’ கட்டுநாயக்கவில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழுவின் முக்கிய சந்தேகநபர்களான ‘புளூமெண்டல் சங்கா’ மற்றும் ‘மோதர நிபுன்’ ஆகியோர், அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர், நேற்று (13) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இவர்கள், பின்னர் அபுதாபிக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின்படி, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தங்களது கைப்பேசிகளில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அபுதாபி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும், பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இருவரையும் உடனடியாக கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ‘மோதர சத்துர’ என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மற்றைய சந்தேகநபரான ‘புளூமெண்டல் சங்கா’ விமான நிலையத்திலேயே CID அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.




