EN
Local

இலங்கையின் மருத்துவக் கல்வி பற்றிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு முதன்முறையாகக் கூடியது.

இலங்கையின் மருத்துவக் கல்வி பற்றிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு முதன்முறையாகக் கூடியது.

“இரக்க குணம் கொண்ட மருத்துவரை உருவாக்கும் புதியதொரு தோற்றத்தினை இலங்கையின் மருத்துவக் கல்வியுடன் இணைக்க வேண்டும்”
– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இரக்க குணம் மிக்க வைத்தியர்களை உருவாக்குவதற்கான புதியதோர் தோற்றத்தினை இலங்கை மருத்துவக் கல்வியுடன் இணைக்க வேண்டும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கையின் மருத்துவக் கல்வி தொடர்பான தேசியக் கொள்கையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்கள் 2026.05.26 ஆம் திகதி இசுருபாய கல்வி அமைச்சு வளாகத்தில் கூடியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மருத்துவக் கல்வியைப் பலப்படுத்துவதன் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் மருத்துவக் கல்வி தொடர்பாக விரிவான தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கமாகும்.
இதன்போது இலங்கையின் மருத்துவக் கல்வியில் அபிவிருத்தி செய்ய வேண்டிய துறைகளை இனங்காணுதல், தற்கால சவால்களுக்குக் குறுகிய கால மற்றும் நிலையான தீர்வுகளை முன்மொழிதல் ஆகிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. மருத்துவக் கல்வி மிகவும் உணர்வுபூர்வமான துறையாக இருப்பதால், இக்குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் இலங்கையின் எதிர்காலத்தின் மீதும், மக்களின் நலன் மீதும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
ஆகையினால் இலங்கையின் மருத்துவக் கல்வியை முன்னேற்றுவதற்கான பாடத்திட்டப் புதுப்பித்தல், மதிப்பீட்டுச் செயல்முறை, மருத்துவப் பயிற்சி, மருத்துவ ஆராய்ச்சித் துறை, மருத்துவ பீடங்களின் கல்வி, கல்விசாரா ஊழியர்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைகள் ஆகிய விடயங்கள் குறித்த கொள்கைகளை வகுப்பதில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
மருத்துவக் கல்வித் துறையில் உள்வாங்கப்பட்டிருக்கின்ற பல்வேறு பாடநெறிகள் தொடர்பில் மருத்துவக் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான செயல்முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, நவீன உலகிற்கு ஏற்ப ஒழுக்கமும் தன்னடக்கமும் மிக்க மருத்துவர்களை உருவாக்குவதற்குத் தேவையான பொதுக்கல்வி மற்றும் உயர்கல்வி மறுசீரமைப்புகளையும் இக்குழுவின் ஊடாக முன்னெடுக்க வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, நிபுணர் குழுத் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button