கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்க காணி மற்றும் கட்டடத்தை விடுவிக்க கோரிக்கை

கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கத்தின் (Kilinochchi Press Club) காணியும் அலுவலகக் கட்டடமும் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவித்துத் தருமாறு கோரி கிளிநொச்சி ஊடக அமையம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் முழுநேர, பகுதிநேர ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2009 டிசம்பர் மாத மீள்குடியேற்றத்துக்குப் பின்னர் எமது நிர்வாகக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு இன்று வரை ஒரு சிவில் அமைப்பாக இயங்கி வருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி A-9 வீதியில் “காக்கா கடை” சந்திக்கு அருகில் சுமார் கால் ஏக்கர் காணியும் அலுவலகக் கட்டடமும் எமக்கு சொந்தமாக இருந்ததாகவும், அங்கிருந்தே அனைத்து ஊடகப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததிலிருந்து அந்த காணியும் கட்டடமும் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள யோகர் சுவாமிகள் நிலையம் மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு போன்ற பகுதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், ஊடகவியலாளர் சங்கத்தின் சொத்து மட்டும் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கங்களுக்கும் எழுத்து மூலம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களில் நம்பிக்கை இருப்பதாகவும், ஊடகப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க காணி மற்றும் கட்டடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் பிரதிகள் ஊடக அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், துரைராசா ரவிகரன் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.



