மானிப்பாயில் வீதி விதிமுறைகளை மீறியதாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் நேற்று சனிக்கிழமை (23) வீதி விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றைய தினம் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டி மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த மானிப்பாய் பொலிஸார், தமது வாகனங்களை வீதி விதிமுறைகளை மீறி பாதசாரி கடவைக்கு அண்மையில் நிறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண பொலிஸார் தமது முச்சக்கர வண்டியையும், வீதி போக்குவரத்து பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளையும் அங்கு தரித்திருந்ததாக அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே அப்பகுதியில் வேறு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பின்னர் வந்த வாகனங்களை அங்கு நிறுத்த வேண்டாம் எனக் கூறி பொதுமக்களுடன் முரண்பட்டதுடன், தாங்களோ அதே இடத்தில் தமது வாகனங்களை நிறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதி குறுகலானதுடன் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதியானதால், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸாரே விதிமுறைகளை மீறியதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தி, இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




