EN
Local

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த சீனர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வந்ததாக சந்தேகத்தின் பேரில் சீன நாட்டைச் சேர்ந்த மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (03) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுடைய வணிகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று அதிகாலை 02.45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல்.-319 (UL-319) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இவர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளில் சோதனை மேற்கொண்டதில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 55,800 சிகரெட்டுகள் அடங்கிய 279 கார்ட்டூன்கள் மறைத்து கொண்டு வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 83,70,000 என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தற்போது சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button