EN
Local

வாழைச்சேனையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்ட விழிப்புணர்வு நடவடிக்கை

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 18.05.2026 அன்று கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் “முழு நாடும் ஒன்றாக” என்ற தொனிப்பொருளில், விஷப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையின் வழிநடத்தலில் நாடு முழுவதும் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சமூக செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் 20.05.2026 புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது, தேசிய செயற்திட்டம் தொடர்பான விளக்கவுரையை பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் எம்.எச். முர்சிதீன் வழங்கினார். இதில் போதைப்பொருள் பயன்பாட்டால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், இளைஞர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், செயலகத்தின் கீழ் உள்ள ஒன்பது கிராம சேவை பிரிவுகளின் ஊடாக அனைத்து கிராமங்களிலும் விநியோகிக்கப்படவுள்ள சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை பிரதேச செயலாளர் கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து, செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் செயலகத்தை அண்மித்த பகுதிகள், ஓட்டமாவடி பிரதான பால நுழைவாயில் மற்றும் நாவலடி சந்தி உள்ளிட்ட முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வு ஊடாக, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்திட்டத்தை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதோடு, சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கமும் முன்னிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button