பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரம்

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமை (15) அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
இது 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு இணையான விடயங்களுக்கு ஏற்பாடுகளை செய்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
“2026 பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்கும் சட்டம்” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டமூலம் மூலம், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி நீக்கப்படும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி நிறுத்தப்படும் என்பதுடன், அந்தப் பதவியை வகித்த நபர் தாம் சார்ந்த ஆயுதப்படை சேவை பிரிவிற்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டம் அமலுக்கு வந்த பின், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளும் பாதுகாப்பு விடயங்கள் பொறுப்பாக உள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




