ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய உணவு விலை நெருக்கடி ஏற்படும் – FAO சிவப்பு எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைப்பில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் உலகளாவிய உணவு விலை நெருக்கடி உருவாகக்கூடும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய பேரழிவைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கால அவகாசம் வேகமாக குறைந்து வருவதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தக விநியோகச் சங்கிலியில் முக்கிய கடல்வழிப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை காணப்படுகிறது.
இந்த நீரிணை மூடப்பட்டாலோ அல்லது கடுமையாக பாதிக்கப்பட்டாலோ, உலக சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகரித்து, சாதாரண மக்களால் தாங்க முடியாத நிலை உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைத் தடுக்க, உலக வல்லரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உடனடியாக தலையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என FAO வலியுறுத்தியுள்ளது.




