பழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் சிக்கல்கள் – பிரதமர் ஹரிணி
கொழும்பு | ஜூன் 10, 2026

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற பிரதமருடனான வினா-விடை நேரத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தற்போது முக்கிய விவாதப் பொருளாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அடிப்படை குறைபாடுகள் மற்றும் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்காமல் தேர்தலை நடத்தினால் நிர்வாக அமைப்பு பாதிக்கப்படுவதுடன், அதன் தாக்கம் நேரடியாக மக்களையே சென்றடையும் என அவர் எச்சரித்தார்.
பழைய முறையில் பல குறைபாடுகள்
பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தொகுதி அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாது என்றும், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதுமான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதிலும் சவால்கள் உருவாகும் என்றும் பிரதமர் கூறினார்.
அத்துடன், ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்திற்கு வழிவகுக்கும் விருப்பு வாக்கு முறைமையை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகும் என அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு அச்சமில்லை
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இரண்டு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அச்சப்படுவதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்றார்.
“தேர்தலைக் கண்டு அச்சமடைய வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்” என அவர் குறிப்பிட்டார்.
புதிய தேர்தல் முறைமை அவசியம்
தற்போதைய காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தேர்தல் முறைமையை சீர்திருத்த வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்த பிரதமர், அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.




