வேகமாக முன்னேறும் AI வளர்ச்சிக்கு இடையில் ஒருங்கிணைந்த “Pause” தேவை – Anthropic எச்சரிக்கை

கிளாட் (Claude) செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கிய Anthropic நிறுவனம், முன்னணி AI ஆய்வகங்கள் இணைந்து ஒருங்கிணைந்த மற்றும் சரிபார்க்கக்கூடிய வகையில் AI வளர்ச்சியில் தற்காலிக இடைநிறுத்தம் (pause) ஒன்றை பரிசீலிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. வேகமாக முன்னேறும் தொழில்நுட்பம், மனித சமூகம் அபாயங்களை நிர்வகிக்க முடியாத அளவுக்கு முன்னேறக்கூடும் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
Anthropic வெளியிட்ட வலைப்பதிவில், AI அமைப்புகள் தானாகவே பணிகளை நிறைவேற்றும் திறன் சுமார் நான்கு மாதத்திற்கு ஒருமுறை இரட்டிப்பாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக “Recursive Self-Improvement” எனப்படும் நிலைக்கு தொழில்நுட்பம் நெருங்கி வருவதாகவும், அதாவது மனித தலையீடு இல்லாமல் AI தானாகவே தனது திறன்களை மேம்படுத்தும் நிலை உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“ஒரு அமைப்பு தன்னுடைய அடுத்த தலைமுறையை தானாகவே உருவாக்கும் நிலைக்கு வந்தால், அவற்றை பாதுகாப்பது, கண்காணிப்பது மற்றும் அதன் நடத்தை வடிவமைப்பது அனைத்தும் மிக முக்கியமானதாக மாறும்,” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய நிலைமைகளை சமாளிக்க சமூகத்திற்கு போதுமான நேரம் வழங்க ஒரு தற்காலிக இடைநிறுத்தம் உதவக்கூடும் என்றும் கூறியுள்ளது.
Anthropic இணை நிறுவனர் ஜாக் கிளார்க் மற்றும் Anthropic Institute தலைவர் மரினா ஃபவாரோ ஆகியோர், இந்த நிலை இன்னும் வரவில்லை என்றாலும் எதிர்பார்த்ததைவிட விரைவாக வரக்கூடும் எனவும், பல நிறுவனங்கள் அதற்குத் தயாராக இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேம்பட்ட AI அமைப்புகள் மனித கட்டுப்பாட்டை மீறி செயல்படக்கூடும் என்ற அச்சம் தொழில்நுட்பம் வளர்ச்சியுடன் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஆரம்பத்தில் Anthropic உருவாக்கிய மேம்பட்ட மாதிரி மென்பொருள் குறைபாடுகளை கண்டறியும் திறனில் பல துறைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், குறிப்பாக அமெரிக்காவில் AI ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மெதுவாக நடைபெற்று வருவதாகவும், அங்கு பெரும்பாலான முன்னணி AI நிறுவனங்கள் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய நிர்வாக உத்தரவின் கீழ், முக்கிய AI நிறுவனங்கள் தங்களின் முன்னணி மாதிரிகளை அரசு பாதுகாப்பு பரிசோதனைக்காக தன்னார்வமாக சமர்ப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
AI வளர்ச்சியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல. 2023 ஆம் ஆண்டு Elon Musk உள்ளிட்ட பலர், ஆறு மாத கால AI வளர்ச்சி இடைநிறுத்தம் வேண்டும் என்ற Future of Life Institute முன்முயற்சியை ஆதரித்தனர். ஆனால் அது பரவலான ஒப்புதலை பெறவில்லை.
Anthropic நிறுவனம் பாதுகாப்பை மையமாகக் கொண்ட AI நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. முன்பு அமெரிக்க இராணுவத்தின் சில பயன்பாடுகளுக்கு தனது மாதிரிகளை வழங்க மறுத்ததால் சர்ச்சையும் ஏற்பட்டது. அதே நேரத்தில், போட்டி நிறுவனங்களுடன் சமமாக இருக்க வேண்டிய நிலை காரணமாக, சில பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், Anthropic நிறுவனம் சுமார் 965 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பெரிய முதலீட்டு சுற்றை பெற்றதுடன், அமெரிக்க IPO-விற்காக இரகசியமாக விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருங்கிணைந்த இடைநிறுத்தம் வெற்றிகரமாக அமைய வேண்டுமெனில் பல முன்னணி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதற்கான விதிமுறைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு அவசியம் என்றும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஒரு நிறுவனம் தனியாக வளர்ச்சியை நிறுத்தினாலும், மற்றவர்கள் தொடர்ந்தால் அது பாதுகாப்பை உறுதி செய்யாது எனவும் Anthropic எச்சரித்துள்ளது.
அதன் ஆராய்ச்சி பிரிவு வரும் மாதங்களில் அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் AI நிறுவனங்களுடன் இணைந்து இவ்வகை அபாயங்களை நிர்வகிப்பது குறித்து ஆலோசனைகள் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.




