முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால் கைது – அரசுக்கு 17 இலட்சத்துக்கும் அதிக நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய பிரசாத் மஞ்சு என்ற நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சின் வாகனங்களை தனிப்பட்ட ஊடகப் பணிகளுக்காக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர் தனக்குரிய உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் அதற்கான எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிகளுக்காக வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த ஏனைய வாகனங்களையும் அவர் தனது ஊடக தேவைகளுக்காக பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 17 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை செய்ததாக கூறி, 52 வயதுடைய கொழும்பு 02, மலே வீதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.




