மெல்போர்னில் வாழும் இலங்கையர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடல்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழும் இலங்கையர்கள் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து அவர் நேரடியாகக் கேட்டறிந்தார். மேலும், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான தீர்மானங்கள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் அவர்களுக்கு விளக்கமளித்தார்.
புதிய அரசாங்கத்தின் மீது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வைத்துள்ள உறுதியான நம்பிக்கைக்கு நன்றியைத் தெரிவித்த அமைச்சர், அந்த நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் என உறுதியளித்தார்.
மெல்போர்னின் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஏராளமான இலங்கையர்கள் பங்கேற்றனர். தாய்நாட்டின் புதிய பயணத்தின் மீது அவர்கள் வெளிப்படுத்திய உண்மையான ஆர்வமும் அக்கறையும் தமக்கு பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தனது அவுஸ்திரேலிய விஜயத்தின் போது மேலும் பல உத்தியோகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அவுஸ்திரேலியாவின் பிற நகரங்களில் வாழும் இலங்கையர்களையும் சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அமைப்பாளர்களுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும், மண்டப வசதி குறைவால் கலந்துகொள்ள முடியாமல் போனவர்களுக்கும் தனது நன்றியை அமைச்சர் தெரிவித்தார்.




