EN
Local

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான “தாயகம்” வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சிறீதரன், து. ரவிகரன், ஞா. சிறிநேசன், க. கோடீஸ்வரன், இ. சிறிநாத் மற்றும் இரா. சாணக்கியன் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பான விடயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் அரசியல் தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள், அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button