EN
Local

சரத் கொங்கஹகே, தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை மீண்டும் செப்டம்பர் மாதம் 08ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக 6 ஊழியர்களைப் பணியில் அமர்த்தி, அவர்களை முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர் குழாமில் இணைத்ததன் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button