அமைச்சர் விஜித்த ஹேரத் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் Vijitha Herath இன்று செவ்வாய்க்கிழமை (12) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை Belarus நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
Maxim Ryzhenkov விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sri Lanka மற்றும் Belarus ஆகிய நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அமைச்சர் விஜித்த ஹேரத்தின் இந்த பயணம் இருநாடுகளின் உறவுகளில் முக்கிய மைல்கல்லாக அமையும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் விஜித்த ஹேரத், பெலாரஸின் தலைநகரமான Minsk நகரில் அந்நாட்டு ஜனாதிபதி Alexander Lukashenkoவை சந்திக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
மேலும், அந்நாட்டின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை, பெலாரஸின் தேசிய ஏற்றுமதி மையம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தக மற்றும் சுற்றுலா வட்டமேசை மாநாட்டிலும் அமைச்சர் விஜித்த ஹேரத் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
பெலாரஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களையும் அவர் இந்த விஜயத்தின் போது சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின் போது கைச்சாத்தாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




