Dr. Nalinda Jayatissa தலைமையில் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்

Dr. Nalinda Jayatissa தலைமையிலான சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, நாட்டின் சுகாதார சேவை கட்டமைப்பில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மேலும் வினைத்திறனுடன் வழங்கும் நோக்கில், மாவட்ட மட்ட சுகாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் “மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள்” ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் அமைச்சரவைப் பத்திரம் சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது ஒப்புதல் பெற்றுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார நிறுவனங்களுக்கும் மாகாண சபைகளின் கீழ் செயல்படும் சுகாதார நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடுகளை நீக்கி, சுகாதார சேவைகளை திறமையாக வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், தற்போதைய அமைப்பில் உள்ளூர் மட்ட சுகாதாரப் பிரச்சினைகளை சரியாக அடையாளம் காணுதல் மற்றும் அவற்றை தேசியத் திட்டங்களுடன் இணைத்தல் போன்ற செயல்பாடுகளில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கான பொறுப்புகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன:
- மாவட்ட மட்ட சுகாதாரத் தேவைகளை அடையாளம் காணுதல்
- பொதுமக்களின் பங்கேற்புடன் முன்னுரிமைத் தேவைகளை தீர்மானித்தல்
- தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் அவற்றை ஒருங்கிணைத்தல்
- வளங்களை திறமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுதல்
- துறைசார் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தல்
- பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சகக் கொள்கைகளுக்கு அமைவாக செயல்படுத்தல்
- முன்னுரிமைத் திட்டங்களை அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தல்
- நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணித்து, காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வதற்கு உதவுதல்
இலங்கையின் சுகாதார சேவை அமைப்பு, மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் உள்ள மருத்துவமனைகள் என இரட்டை நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளதாகவும், இதனால் ஒருங்கிணைப்பு குறைபாடுகள் மற்றும் வளப் பயன்பாட்டில் திறமையின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்:
- அனுராதபுரம் – சுசந்த குமார நவரத்ன
- பதுளை – ரவீந்திர பண்டார
- மட்டக்களப்பு – கந்தசாமி பிரபு
- கொழும்பு – நஜித் இந்திகா
- அம்பாறை – எம். எம். சுகத் ரத்நாயக்க
- காலி – நிஷாந்த சமரவீர
- கம்பஹா – தர்மப்பிரிய விஜேசிங்க
- ஹம்பாந்தோட்டை – சதருவன் மதரசிங்க
- யாழ்ப்பாணம் – எஸ். ஸ்ரீ பவனந்தராஜ
- கேகாலை – ஆர். எம். சமந்த ரணசிங்க
- களுத்துறை – கலாநிதி நிஹால் அபேசிங்க
- கண்டி – தனுர திஸாநாயக்க
- குருநாகல் – கலாநிதி ஜகத் குணவர்தன
- மாத்தளை – செல்வி தீப்தி நிரஞ்சனி வாசலகே
- மாத்தறை – லால் பிரே மனாத்
- மொனராகலை – எச். எம். சரத் குமார
- நுவரெலியா – டி. பண்டார
- புத்தளம் – கயான் ஜானக
- இரத்தினபுரி – கலாநிதி ஜனக சேனாரத்ன
- திருகோணமலை – ரொஷான் அக்மீமன
- வன்னி – செல்வத்தம்பி திலகநாதன்
இந்த புதிய முறையின் மூலம் நாட்டின் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தி, மக்களுக்கு மேலும் வினைத்திறனான சேவையை வழங்குவதே அமைச்சின் பிரதான நோக்கமாகும்.




