EN
Local

முல்லைத்தீவு, வவுனியா, மன்னாரில் தபால் சேவை குறைபாடுகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தபால் சேவையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் சேவைக்காக 142 ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 25 வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்றார்.

மன்னார் மாவட்டத்தில் 228 ஊழியர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு 32 வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 230 அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் 56 வெற்றிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் 2025 டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், தபால் போக்குவரத்தில் காணப்பட்ட குறைபாடுகளை சரிசெய்யும் நோக்கில் 10 லொறிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் போதுமான சேவைகளை வழங்க முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Related Articles

Back to top button