இலங்கை வருகிறார் மாலைத்தீவு ஜனாதிபதி

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு, உத்தியோகபூர்வ விஜயமாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (03) இலங்கை வரவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முக்கிய இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சு மற்றும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கு இடையில், பயிற்சித் திட்டங்கள், ஊழியர் பரிமாற்றம், கூட்டு ஆய்வுகள், மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
மாலைத்தீவின் கல்வி, உயர்கல்வி மற்றும் திறன்கள் மேம்பாட்டு அமைச்சு மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இடையே, ஆசிரியர் பயிற்சி, பாடசாலை தலைமைத்துவ மேம்பாடு, தொழில்சார் திறன் வளர்ச்சி, துறைகளில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.




