EN
Sports

மனு பாக்கரிடம் வைபவ் சூர்யவன்ஷி பற்றி கேள்வி..!

இந்தியாவின் இளம் சாதனையாளர்களான துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரை தொடர்புபடுத்தி கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர் மனு பாக்கரிடம், 15 வயதேயான வளர்ந்து வரும் துடுப்பாட்ட நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த 24 வயதான மனு பாக்கர், “திறமைக்கு வயது ஒரு தடையல்ல. சரியான வழிகாட்டலும் சிறந்த சூழலும் அமைந்தால் 6 வயதிலும் சாதிக்கலாம், 60 வயதிலும் சாதிக்கலாம். அவருக்கு முறையான வழிகாட்டல் கிடைத்தால் நிச்சயம் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார்,” என்று மிகவும் முதிர்ச்சியுடன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

மனு பாக்கரின் பதில் கண்ணியமாக இருந்தபோதிலும், ஒரு ஒலிம்பிக் வெற்றியாளரிடம் துடுப்பாட்ட வீரர் ஒருவரைப் பற்றி கேள்வி கேட்டது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பணிப்பாளர் ஜோய் பட்டாச்சார்யா தனது எக்ஸ் (X) தளத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “மனு பாக்கர் ஒரு ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர். அவரிடம் போய் வைபவ் சூர்யவன்ஷி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பது அவருடைய சாதனைக்கும் அவர் சார்ந்த விளையாட்டுக்கும் செய்யும் அநீதியாகும்.

விளையாட்டு செய்தி ஆசிரியர்களுக்கு தலைப்புச் செய்திகளை உருவாக்க இன்னுமொரு பிரபலத்தின் கருத்துத் தேவைப்படலாம், ஆனால் அதற்காக ஒரு ஒலிம்பிக் வீராங்கனையை பயன்படுத்தக் கூடாது. அடுத்த முறை வைபவ் சூர்யவன்ஷியிடம் மனு பாக்கர் பற்றி கேள்வி கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் நிலைமை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button