கிளிநொச்சியில் போர்காலத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 4 வெடிகுண்டுகள் மீட்பு

கிளிநொச்சி அக்கராயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவல் கடந்த 07.05.2026 அன்று ஹலோ டிரஸ்ட் (HALO Trust) கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் அதிகாரிகளால் ஜெயப்புரம் காவல் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
எனினும், சம்பவ இடம் அக்கராயன்குளம் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதி என்பதால், அங்கு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நேற்று (08.05.2026) பிற்பகல் 2.30 மணியளவில் ஹலோ டிரஸ்ட் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், அக்கராயன்குளம் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று குறித்த நான்கு வெடிகுண்டுகளையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வெடிகுண்டுகள் தற்போது காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று (09.05.2026) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதல்களின் பின்னர், குறித்த வெடிகுண்டுகளை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



