தோல்வியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மும்பை… ஹர்திக் பாண்டியா வேதனை

வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த சீசனில் மும்பை அணி சந்திக்கும் தொடர்ச்சியான 4ஆவது தோல்வி இதுவாகும்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 12 ஓட்டங்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த குயின்டன் டி கொக் மற்றும் நமன் தீர் 3ஆவது விக்கெட்டுக்கு 123 ஓட்டங்களைச் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர். டி கொக் ஆட்டமிழக்காமல் 112* ஓட்டங்களையும் நமன் தீர் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இருப்பினும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் மும்பை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
196 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 66 ஓட்டங்களின் உதவியுடன் 16.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
இந்நிலையில், இத்தோல்விக்கு பின் பேசிய அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா தனது அதிருப்தியைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், “உண்மையைச் சொல்லப்போனால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என மூன்றிலும் பஞ்சாப் அணி எங்களை விட சிறப்பாகச் செயல்பட்டது. நாங்கள் எங்கே தவறு செய்கிறோம் என்பதை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும். அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது இருக்கும் வீரர்களைக் கொண்டே தொடர வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்” என்றார்.
ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.




