மாலைதீவு ஜனாதிபதி மற்றும் இலங்கை பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்ற வர்த்தக மன்றம்

மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றம், மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (05) மாலை கொழும்பில் நடைபெற்றது.
மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் மாலைதீவு மற்றும் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, அரை நூற்றாண்டுக்கும் மேலான இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் நம்பிக்கை, மக்களுக்கிடையிலான நெருங்கிய தொடர்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நட்புறவை, பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதே தமது எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டார்.
மாலைதீவு “முன்னேறிச் செல்லும் ஒரு தேசம்” எனச் சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்தியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான தேசமாக மாறுவதே தமது நாட்டின் இலக்கு என்றும், இந்த அபிவிருத்தி அணுகுமுறை மக்கள் மையப்படுத்தப்பட்ட, தொழில்நுட்பத்தால் பலப்படுத்தப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவித்தார்.
இலங்கை மாலைதீவின் அண்டை நாடு மட்டுமல்ல, மிக முக்கியமான மூலோபாய பங்காளியும் கூட என அவர் வலியுறுத்தினார். மாலைதீவு வர்த்தகர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை விரிவாக்க ஆர்வமாக உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முதலீடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இலங்கையின் அனுபவமும் திறமையும் மாலைதீவின் எதிர்காலப் பயணத்திற்குப் பெரும் பலமாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் மாலைதீவுகள் ஒரு வளர்ந்து வரும் டிஜிட்டல் மையமாகத் திகழ்கிறது என்றும், இது தனது நாட்டின் மீது சர்வதேச நிறுவனங்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி முய்சு தெரிவித்தார்.உள்கட்டமைப்பு, டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்து மாலைதீவுடன் கைகோர்க்குமாறு இலங்கை வர்த்தக சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை நவீன பொருளாதாரப் பங்களிப்பாக மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையைப் பாதித்த ‘டித்வா’ சூறாவளி மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை வரலாற்றில் அதிகூடிய வருடாந்த சுற்றுலாப் வருகையை 2025 இல் பதிவு செய்துள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்காக மாலைதீவு அரசாங்கமும் வர்த்தக சமூகமும் வழங்கிய 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான அசைக்க முடியாத நட்பிற்குச் சிறந்த உதாரணம் என அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
2025 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றம் 137 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த போதிலும், அது உண்மையான திறனை விட மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மாலைதீவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை உட்பட பல்வேறு துறைகளில் 20,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழில் வல்லுநர்கள் தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உணவு உற்பத்தி மற்றும் மீன் பதப்படுத்துதல் ஆகிய துறைகள் ஊடாக வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
மேலும், 2030 ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை பயணித்துக் கொண்டிருப்பதாகவும், தெற்காசியாவின் பிரதான நிதி மையமான கொழும்பு துறைமுக நகரத்திற்குள் மாலைதீவு முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நிலையான ‘நீலப் பொருளாதாரம்’ திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் போன்ற கூட்டாண்மைகள் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் செழிப்பை ஏற்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் மொஹமட் சயீத் உரையாற்றுகையில், மாலைதீவு வெறும் சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி, பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். டிஜிட்டல் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிதிச் சேவைகள் மூலம் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், இந்து சமுத்திரத்தில் வர்த்தகம், மூலதனம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு மூலோபாய மையமாக மாலைதீவை நிலைநிறுத்துவதே மாலைதீவு அரசாங்கத்தின் அபிலாசை என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். உலகளாவிய விநியோகச் சங்கிலி மறுசீரமைப்பு, டிஜிட்டல் மாற்றம், நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் மூலோபாய ரீதியாக இணைந்து பணியாற்றுவதற்குப் பாரிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், குறிப்பாக டிஜிட்டல் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தி, மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பொருளாதாரக் கூட்டாண்மையைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த தூதுக்குழுவினர், வர்த்தகப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




