EN
Local

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாலைதீவு மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் மேம்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு இந்த அரச பயணத்தை மேற்கொள்கிறார்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் அவரது பாரியார் சாஜிதா முகமது, பொலிஸ் குதிரைப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது.

அங்கு முழுமையான அரச கௌரவத்துடன் கூடிய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையையும் மாலைதீவு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் கௌரவ மரியாதைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மாலைதீவு – இலங்கை அரச பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மாலைதீவு ஜனாதிபதி அரச தலைவர்களுக்கான விசேட நினைவுப் புத்தகத்தில் விசேட குறிப்பொன்றை இட்டு கையொப்பமிட்டார்.

Related Articles

Back to top button