வைபவ் சூர்யவன்ஷி 400 ஓட்டங்களைக் கடந்து சாதனை

நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ஒட்டங்களை கடந்து வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இப்போது ஆரஞ்சு தொப்பியும் அவர் வசமாகியுள்ளது.
ரி20 கிரிக்கெட்டின் துடுப்பாட்டப் பாணியை தனது அதிரடி ஆட்டம் மூலம் மாற்றி அமைத்து வருகிறார் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி. தான் விளையாடும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் புது புது சாதனைகளை அவர் படைத்து வருகிறார். சர்வதேச அளவில் இளையோர் கிரிக்கெட்டிலும் இதையே தான் அவர் செய்து வருகிறார். இப்போது அதை ஐபிஎல் பக்கம் திருப்பியுள்ளார்.
நேற்று (28) நியூ சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 43 ஒட்டங்களை அவர் விளாசி இருந்தார். இதன் மூலம் தனது அணி 223 ஒட்டங்கள் என்ற இலக்கை எட்ட உதவினார். இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், அது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நடப்பு தொடரில் முதல் தோல்வியாக அமைந்தது.
இந்த சீசனில் 9 இன்னிங்ஸில் விளையாடி, 168 பந்துகளில் 400 ஒட்டங்களை வைபவ் சூர்யவன்ஷி எடுத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் குறைந்த பந்துகளில் விரைவாக 400 ஒட்டங்களை எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ஒட்டங்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் முதலிடம் பிடித்து, ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கியுள்ளார்.




