தேசிய வீடமைப்புக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்கு அனுமதி

தேசிய வீடமைப்புக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமகால அரசு ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘வசதியான இல்லம் – சுகாதார பாதுகாப்புடனான வாழ்வு’ வீடமைப்புக் கொள்கை மூலம், இலங்கையில் குறிப்பாக குறைந்த வருமானங் கொண்ட சமூகத்தவர்களுக்கு போதியளவான தரமான வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, வீடமைப்பு மற்றும் குடியேற்ற வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையிலும், அதுதொடர்பாக புதிய உலகளாவிய போக்குகளையும் கருத்தில் கொண்டு, 2019 ஆம் ஆண்டில் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்ட தேசிய வீடமைப்புக் கொள்கையை மீண்டும் திருத்தம் செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குடியேற்ற வசதிகள் தொடர்பாக சமகால சவால்களை வென்றெடுப்பதற்காக நிலைபெறுதகு தீர்வுகளைக் கண்டறிவதற்கு இயலுமை கிட்டும் வகையில் தேசிய வீடமைப்புக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்காகவும் மற்றும் குறித்த திருத்தங்களை மனிதக் குடியேற்ற வசதிகள் தொடர்பான நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றின் மூலம் மேற்கொள்வதற்காக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




