EN
International

ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்த ஈரான்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹோர்முஸ் நீரிணையை மூடியது.

இதனால் சவுதி அரேபியா, கட்டார் , ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஈரானுக்கு கெடு விதித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தார். ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஈரான் அடிபணியாத நிலையில், காலக்கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, “இன்று ஒரு முழு நாகரீகம் அழியப்போகிறது” என்று ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டு ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். போர்நிறுத்த காலத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தாது என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

அதே சமயம், லெபனான் மீதான தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது. இதனை ஏற்று லெபனான் – இஸ்ரேல் இடையிலான் போர் 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதாக ஈரான் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பழையபடி கப்பல்கள் கடந்து செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. போர்நிறுத்தத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button