தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திருத்தப்பணிகள் – பொலிஸார் விடுத்த அறிவித்தல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம – தொடங்கொட நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (01) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடங்கொட இடையே, 17 – 19 கிலோமீட்டர் மற்றும் 28 – 30 கிலோமீட்டர் ஆகிய இரண்டு பகுதிகளில் மாத்தறை நோக்கிச் செல்லும் வீதியில் இந்தத் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திருத்தப்பணிகள் நடைபெறும் இந்த இரண்டு பகுதிகளிலும், மாத்தறை நோக்கிச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள இரு திசைகளிலும் வாகனங்கள் பயணிக்கக்கூடிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த போக்குவரத்து மாற்றத்தினால் குறித்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், விபத்துக்கள் நிகழும் அபாயமும் காணப்படுகின்றது. எனவே, இந்தப் பாதையினூடாகப் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




