கைப்பற்றப்பட்ட படகில் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின்!

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுய இலாபத்திற்காகவும், நிதி நலன்களுக்காகவும் கடத்தல்காரர்களைப் பயன்படுத்தியதுடன், அப்பாவி மக்களையும் இளைஞர்களையும் இதற்கு அடிமையாக்கியதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால், தற்போது அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி கடற்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியன சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட முறையில் இந்த சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கடற்படையினரால் இந்தப் நெடுநாள் மீன்பிடி படகு பொறுப்பேற்கப்பட்டதுடன், அதிலிருந்த 6 போதைப்பொருள் பொதிகளுடன் 4 சந்தேகநபர்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




