மலையக மக்களின் காணி உரிமைக்காக கொழும்பில் ‘நாம் நீலகாமம்’ அமைதி போராட்டம்
கொழும்பு | சமூகச் செய்தி

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை நீலகாமம் தோட்டப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தியும் ‘நாம் மலையகம்’ அமைப்பின் ஏற்பாட்டில் ‘நாம் நீலகாமம்’ எனும் தலைப்பில் அமைதி போராட்டம் இன்று (5) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் ஆரம்பமாகவுள்ளது. அண்மையில் நீலகாமம் தோட்டத்தில் முகக் கவசம் அணிந்த சிலர் ஒருவரை தாக்கியதுடன், அவர்களின் குடியிருப்புக்கும் சேதம் விளைவித்த சம்பவம் சமூகத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில், நீலகாமம் சம்பவம் தனித்த சம்பவமல்ல; மலையக மக்களின் உரிமைகளை ஒடுக்கி வரும் நீண்டகால பிரச்சினையின் ஓர் அங்கமாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் மலையக மக்கள் இன்னும் சொந்த காணி உரிமை இன்றி வாழும் நிலை மாற்றப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், நீலகாமம் மக்களுக்காகவும், முழுமையான மலையக சமூகத்தின் காணி உரிமைக்காகவும் இந்த அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இதில் சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




