மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார்

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக, அவர் இன்று (3) மாலை 5.35 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார்.
இலங்கை வந்த மாலைத்தீவு ஜனாதிபதி உட்பட தூதுக்குழுவினரை பிரதமர் ஹரிணி அமரசூரிய சம்பிரதாயமாக வரவேற்றார்.
இந்நிலையில் அவரை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
மாலைத்தீவு ஜனாதிபதியுடன் அவரது மனைவி மற்றும் அந்த நாட்டின் 20 உயர்மட்ட அதிகாரிகளும் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்
2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது ராஜதந்திர விஜயம் இதுவாகும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும் மாலைத்தீவு ஜனாதிபதி, எதிர்வரும் 6ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன.



