EN
Local

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், கேரள கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாமில் அமைந்துள்ள தலைமையக விசேட செயல்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா வஸ்கடுவ பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தினர்.

இதன்போது, ‘பொம்புவல நவின்’ என்பவரின் கடத்தல் வலையமைப்பில் உறுப்பினராகவும், போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கதனஆரச்சிகே நுவான் இரேஷ் பெர்னாண்டோ’ என்பவருக்காக போதைப்பொருள் விநியோகிப்பவராகவும் செயற்பட்டு வந்த வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ‘பட்டி அக்கா’ என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா, 110,000 ரூபாய் பணம் மற்றும் மின்சாரத் தராசு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button