கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுகூரல் வாரம் ஆரம்பம்

தமிழினப் படுகொலை நாளாகக் கருதப்படும் மே 18ஆம் திகதியை நினைவுகூரும் நிகழ்வு, கடந்த மே 5ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Gary Anandasangaree மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Juvininder Nathan ஆகியோர் தலைமையேற்றனர்.
ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களைச் சேர்ந்த பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
மேலும், லிபரல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் Gary Anandasangaree, தமிழ் மக்களின் உரிமைகள், தமிழ் மொழி, சுயநிர்ணய உரிமை மற்றும் நிலம், கலாசார உரிமைகளுக்காக பல தசாப்தங்களாக போராடியவர்களின் தியாகம் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் நீதியும் பொறுப்புக்கூறலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பலரும் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், அந்தப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2022ஆம் ஆண்டு கனடிய நாடாளுமன்றம் மே 18ஆம் திகதியை தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்தமை, இலங்கை அரச தலைவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் United Nations Human Rights Council இல் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு கனடா வழங்கி வரும் ஆதரவை அவர் நினைவுகூர்ந்தார்.
மொன்ரியல் நகரசபை உறுப்பினர் Milanie Thiagarajah உரையாற்றுகையில், மே 18 என்பது தமிழர் வரலாற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த துயர்நாள் என்றும், கனடாவில் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் நெருக்கமான வரலாற்று நினைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேவேளை, இது தமிழர்களின் போராட்டத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதாக கூறினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis, இனப்படுகொலை அனுபவித்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக, தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை புரிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



