இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ நாட்டிலிருந்து புறப்பட்டது

இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக கடந்த 21ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில், பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் நேற்று நாட்டிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு இணங்க, கொழும்பு துறைமுகத்தில் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
அதன்படி, ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் சைலேஷ் குமார் தியாகிக்கும், மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் ஜகத் குமாரவிற்கும் இடையே மேற்கு கட்டளை தலைமையகத்தில் ஒரு உத்தியோகப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது.
இந்தப் பயிற்சிப் பயணத்தின்போது மூழ்குதல் ஆதரவு கப்பல் வகைக்குரிய ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ கப்பல் நாட்டில் இருந்த வேளையில், அதன் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து மிக்ஸ்ட் கேஸ் டைவிங் ட்ரெய்னிங் (Mixed Gas Diving Training) என்ற பயிற்சியை நடத்தினர். இரு நாடுகளின் சுழியோடி துறைகளுக்கு இடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.
மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நட்பையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சி, கைப்பந்துப் போட்டி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி ஆகியவற்றில் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ கப்பலின் குழுவினர் பங்கேற்றதோடு, நாட்டிலுள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களையும் பார்வையிட்டனர்.





