கரையோர ரயில் சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு

தடம் புரண்டுள்ள ‘சாகரிகா’ ரயிலை மீண்டும் தடமேற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்குள் அதன் போக்குவரத்து நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா ரயில், இன்று (24) காலை வாத்துவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது.
இந்த விபத்தினால் இரட்டை ரயில் பாதைகளில் ஒரு பாதைக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தடம் புரழ்வு காரணமாக முடங்கியுள்ள கரையோர ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகளை, கொழும்பில் இருந்து பாணந்துறை ரயில் நிலையம் வரை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மூலம் பயணிகள் களுத்துறை தெற்கு ரயில் நிலையம் வரை அழைத்துச் செல்லப்படுவர் எனவும், அங்கிருந்து மாத்தறை மற்றும் பெலியத்தை வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்றைய மாலைப் பொழுது முடிவதற்குள் ரயில் பாதையில் உள்ள தடைகளை அகற்றி, ஒரு பாதையையாவது ரயில் போக்குவரத்திற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




