Local
இலங்கையின் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்புறுதி அட்டைகள் அறிமுகம்

இலங்கையின் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் காப்புறுதித் துறையில் உள்ள பிற பங்குதாரர்கள் இணைந்து, 2026 மே 01 முதல் பாரம்பரிய மோட்டார் வாகனக் காப்புறுதிச் சான்றிதழ்களுக்கு பதிலாக டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்புறுதி அட்டைகளை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, இலங்கை பொலிஸ் தலைமையகத்தினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய முறையின் கீழ், மோட்டார் வாகனக் காப்புறுதி பாதுகாப்பு பின்வரும் வடிவங்களில் வழங்கப்படவுள்ளது:
- டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்புறுதி அட்டை
- அச்சிடப்பட்ட சான்றிதழ் (காப்புறுதி தாரரின் கோரிக்கையின் பேரில் மட்டும்)
- காப்புறுதி நிறுவனங்களின் கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் காப்புறுதி அட்டை.



