EN
Local

யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில், வட்டுக்கோட்டை பிரிவுக்குட்பட்ட களுவத்துறை பகுதியில் 79 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த குறித்த பெண்ணின் இரு பிள்ளைகளும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர் ஒரு பணிப்பெண்ணின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம், வெளிநாட்டில் உள்ள அவரது பிள்ளைகள் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் பதில் கிடைக்காத நிலையில், அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சடலத்திற்கருகில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்கள் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று முழுமையாக காலியாக இருந்தது. மேலும், வீட்டின் உள்ளே மின்விசிறியில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்று அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸாரும் தடயவியல் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button