7 வயது சிறுவன் இஷாங்கின் உலக சாதனை – இலங்கை முதல் இந்தியா வரை நீந்தி வரலாறு படைத்தார்

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து வந்த 7 வயது சிறுவன் இஷாங்க், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான கடினமான கடல் பாதையை நீந்தி கடந்து, மிகவும் இளம் வயதிலேயே புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
ராஞ்சியின் துர்வா பகுதியைச் சேர்ந்த இச்சிறுவன், தலைமன்னார் இலிருந்து தனுஷ்கோடி வரை, ஆபத்தான பாக்கு நீரினை வழியாக சுமார் 29 கிலோமீட்டர் தூரத்தை 9 மணி 50 நிமிடங்களில் நீந்தி கடந்து சாதனை புரிந்தார்.
இந்த சாதனையின் மூலம், இந்த பாதையை கடந்து சென்ற உலகின் இளம் வயதான நீச்சல் வீரராக அவர் புதிய சாதனையை நிறுவியுள்ளார்.
இந்த சாதனை 2026 ஏப்ரல் 30 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடுமையான பயிற்சி, கட்டுப்பாடு மற்றும் உறுதியான மனப்பாங்கின் விளைவாக இந்த சாதனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு Universal Records Forum அமைப்பினால் “Youngest and Fastest Palk Strait Swimmer” என்ற உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைய, ராஞ்சியில் உள்ள துர்வா அணையில் தினமும் 4 முதல் 5 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொண்டார். அவரது பயிற்சியாளர்கள் அமன் குமார் ஜெய்ஸ்வால் மற்றும் பஜ்ரங் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்றார்.
ராஞ்சியில் உள்ள DAV Shyamali பள்ளியில் 3 ஆம் வகுப்பு மாணவராக உள்ள இஷாங்கின் சாதனை, ஜார்கண்ட் மாநிலத்திற்கும் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. பள்ளி முதல்வரும் அவரது சாதனையை பாராட்டியதுடன், இளம் வயதிலேயே கடினமான கடல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு உலக சாதனை படைத்தது அவரது தைரியம், கட்டுப்பாடு மற்றும் உறுதியை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், அர்ப்பணிப்பு மற்றும் சரியான வழிகாட்டுதல் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதை இஷாங்க் நிரூபித்துள்ளார் என்றும், அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.




