யாழில் AI தவறான பயன்பாடு: மூன்று மாணவர்கள் கைது

சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக மாற்றி, அவற்றை சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற, சமீபத்தில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாடசாலை அதிபர் மருதங்கேணி பொலிஸ் நிலையம்க்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், முதற்கட்டமாக 17 வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் செவ்வாய்க்கிழமை (28) கிளிநொச்சி நீதிமன்றம் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன், குறித்த மாணவர்களை புதன்கிழமை (29) வரை அச்சுவேலி பகுதியில் உள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் (தடுப்புக்காவல் இல்லம்) தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மருதங்கேணி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




