EN
International

உக்ரைனுடனான போரில் ரஷ்யவுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கிம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு வட கொரியா மீண்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு ஏவுகணைகள், வெடிபொருட்கள், இராணுவ உதவிகள் போன்றவற்றை வட கொரியா வழங்கியுள்ளது. அதற்கு பதில் உதவியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவிற்கு இராணுவ தொழில்நுட்பங்கள், உணவு, எரிசக்தி போன்ற உதவிகளை ரஷ்யா வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் அதிகாரப்பூர்வமாக வட கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டது, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலூசாவ் வட கொரிய ஜனாதிபதியை நேற்று (26) சந்தித்தது இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

”நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வட கொரியா முழுமையாக ஆதரிக்கும். தற்போது நடைபெறும் புனிதப் போரில் ரஷ்ய இராணுவமும், மக்களும் கண்டிப்பாக வெற்றி பெறுவர்” என்று கிம் ஜாங் உன் ரஷ்ய அமைச்சரிடம் தெரிவித்ததாக வட கொரிய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

வடகொரியா – ரஷ்யா இடையேயான ஆழமான இராணுவ உறவுகள் குறித்து அதிகாரிகள் இணைந்து விவாதித்ததாகவும், 2027 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்திற்கான இராணுவ ஒத்துழைப்புத் திட்டத்தில் கையெழுத்திட ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் பெலூசாவ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button