டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த சல்மான்!

பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் சல்மான் அலி அகா, டி20 கிரிக்கெட்டில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்ள ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த பெப்ரவரி – மார்ச் மாதங்களில் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.
இந்த நிலையில், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கிண்ண மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக, டி20 போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வது குறித்து பாகிஸ்தான் அணியின் டி20 தலைவர் சல்மான் அலி அகா ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட இடங்களில் ஒக்டோபர் மற்றும் நவம்பரில் ஐசிசி ஒருநாள் உலகக்கிண்ணத் தொடர் நடைபெறுகிறது. மேலும், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் நடைபெறுகிறது. இதனை மையப்படுத்தி சிறிதுகாலம் இடைவெளி எடுத்துக் கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சல்மான் அலி அகா கூறுகையில், “உலகக்கிண்ணம் இன்னும் நீண்ட நாள்கள் இருக்கின்றன. ஆனால், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது குறித்து சிந்திக்க வேண்டும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக டி20 போட்டிகளிலிருந்து ஓய்வெடுக்க விரும்புகிறேன். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நன்றாக விளையாடும் இளம் வீரர்களைத் தேசிய அணிக்குத் தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படும் வீரர்கள் தேசிய அணியில் சோபிக்காமல் போவதையும் பார்க்க முடிகிறது” என்றார்.



