எதிர்கால காலநிலைச் சவால்களுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன்

வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், திடீரென மாற்றமடையும் காலநிலையால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்களை விரைவாக தகவமைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மட்டத்தில் காலநிலை ஆளுகையை வலுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த உணர்வுள்ள உள்ளூர் ஆட்சி தொடர்பான இரண்டு நாள் வதிவிட செயலமர்வு Jetwing Hotelவில் நேற்று (09.05.2026) ஆரம்பமானது.
ஜனநாயக மற்றும் ஆளுகைக்கான நிறுவனம் (IDAG) மற்றும் Konrad-Adenauer-Stiftung (KAS) இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை மக்கள் தற்போது நேரடியாக அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டார். திடீர் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நீண்டகால வறட்சி போன்றவை பாரம்பரிய பருவநிலை கணிப்புகளைத் தாண்டி உணவுப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டை பாதித்த “டித்வா” பேரிடரை நினைவுகூர்ந்த அவர், குறுகிய காலத்திலேயே பெய்த கடும் மழையால் வட மாகாணம் உட்பட நாடு முழுவதும் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், கடந்த பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களை பயன்படுத்தி முன்கூட்டியே தயார்படுத்தல்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“டித்வா” பேரிடரின் போது உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டிய ஆளுநர், தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமன்றி நீண்டகால கட்டமைப்பு ரீதியான தயாரிப்புகளும் அவசியம் என குறிப்பிட்டார். மேலும், காலநிலை மாற்றத்தை சமாளிக்க பாரம்பரிய விவசாய முறைகளும் நவீன தொழில்நுட்பங்களுடன் மாற்றியமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த செயலமர்வில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
காலநிலை மாற்றம் குறித்த அடிப்படை அறிவு, இலங்கை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
மேலும், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் “காலநிலைச் செயல் குழுக்கள்” அமைத்து அவற்றை திறம்பட செயல்படுத்துவதற்கான நடைமுறை வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




