மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்

இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்போது மின்சாரக் கட்டணங்களை 8% முதல் 14.4% வரையிலான சதவீதத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதைக் கருத்திற் கொண்டு, இரண்டாம் காலாண்டிற்கான திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை ‘நேஷனல் சிஸ்டம் ஆப்பரேட்டர்’ நிறுவனம் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
எவ்வாறாயினும், மின்சாரக் கட்டண அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, 15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிடம் உடன்பட்டுள்ளது. இதன்படி, இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பானது நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்குப் பொருந்தாது.
அதாவது, வீட்டுப் பிரிவில் 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு எந்தவிதக் கட்டண அதிகரிப்பும் கிடையாது.




