EN
Local

இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறல் ; உடனடி நடவடிக்கை தேவை – யாழ்ப்பாணத்தில் வசந்த முதலிகே வலியுறுத்தல்

இந்தியாவின் பாரிய இழுவைப்படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, கடல் வளங்களை சூறையாடுவதையும், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதையும் தடுக்க அரசாங்கம் உடனடி மற்றும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் மற்றும் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக, மக்கள் போராட்ட முன்னணி மற்றும் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தினர் இன்று (07) யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, “இந்தியாவின் பாரிய இழுவைப்படகுகள் எமது கடல் எல்லைக்குள் பலவந்தமாக நுழைந்து கடல் வளங்களை அழித்து வருகின்றன. இது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் நாட்டின் இறைமைக்கும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “சட்டவிரோதமாக நுழையும் படகுகளை கண்காணிக்க தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்திடம் போதுமான அளவில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை சரிசெய்ய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் இலங்கை மீனவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் சொத்து சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் அண்மைய சம்பவமாக, கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தி, திபூஷ் தயானாஸ் என்ற மீனவரை கடத்திச் சென்றதாகவும் கூறினார்.

அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், இந்தியாவுடன் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்களின் விவரங்கள் மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் வெளியிடப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், “இந்தியாவின் தலையீடுகள் குறித்து அரசாங்கம் கடைப்பிடிக்கும் மெத்தனமான அணுகுமுறையை ஏற்க முடியாது” என்றார்.

யாழ்ப்பாண மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும், இந்திய இழுவைப்படகுகளின் ஊடுருவலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button