EN
Local

வாடகை வீடுகள் மூலம் மோசடி, குற்றச்செயல்கள் – சொத்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

வீடுகள் மற்றும் கட்டிடங்களை குறுகிய அல்லது நீண்டகால அடிப்படையில் வாடகை அல்லது குத்தகைக்கு பெறும் சிலர், அவற்றைப் பயன்படுத்தி மோசடி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், சொத்து உரிமையாளர்கள் வீடுகள் அல்லது கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு வழங்கும்போது மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்களுக்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் எதிர்பாராத விதமாக மோசடி மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, சொத்து உரிமையாளர்கள் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவின்படி, எந்தவொரு வீட்டிலும் வசிக்கும் அனைவரின் தகவல்களையும் பெறுவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாகவும், குடும்பத் தலைவர் தனது குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வழங்க வேண்டியது கடமையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வசிப்போரில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதனை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் என்றும், அவ்வாறு அறிவிக்க தவறுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வீடு அல்லது கட்டிட வளாகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை அறிந்தும் மறைத்து வைத்திருப்பது, அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, வீடுகள் அல்லது கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு வழங்கும் போது, பெறுபவர்களின் அடையாளம், நோக்கம் மற்றும் தேவைகள் குறித்து உரிய கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவதன் மூலம் மோசடி மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button