EN
Local

இலங்கை – ரஷ்யா இடையே சுகாதாரத்துறை ஒத்துழைப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான குழுவினர், இன்று (04) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த இரு தரப்பு சந்திப்பானது சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது மற்றும் அதனை நவீனப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சுகாதார சேவையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இரு நாடுகளும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. குறிப்பாக, 42 வகையான நோய்களைக் கண்டறியக்கூடிய, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ உபகரணத் தொகுதி குறித்து ரஷ்ய அமைச்சர் விளக்கமளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே மருந்து உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டது.

இலங்கை மருத்துவர்களுக்கு மேலதிக மருத்துவக் கல்வியை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அமைச்சர் மிகைல் முராஷ்கோ இதன்போது தெரிவித்தார். ரஷ்யாவின் நவீன சுகாதார முறைமை மற்றும் ஏஐ தொழில்நுட்ப சிகிச்சைகள் குறித்து நேரில் கண்டறிய, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அதிகாரிகளை ரஷ்யா வருமாறு ரஷ்ய சுகாதார அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளின் சுகாதார அமைச்சுகளுக்கும் இடையே எதிர்காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி, இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button