EN
Local

‘கம்பன் புகழ்” விருது பெற்றார் ஜனாதிபதி

அகில இலங்கை கம்பன் கழகம், 2026ஆம் ஆண்டிற்கான உயரிய ‘கம்பன் புகழ்’ விருதினை அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இன வேறுபாடுகளால் பிளவடைந்த நாட்டை ஒன்றுபடுத்தும் முயற்சிகளும், சிறுபான்மை சமூகங்களையும் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்தும் அவரது பணியையும் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது, கம்பன் விழா 2026இன் இறுதி நாள் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை 5.30 மணிக்கு இராமகிருஷ்ண மிஷன் மண்டபம், கொழும்பு நகரில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டது. தொழிலதிபர் என்.எஸ். வாசு மங்கள விளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். நீதியரசர் பா. சசி மகேந்திரன் தலைமையுரையையும், தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த டாக்டர் முஹமட் ரேலா தொடக்கவுரையையும் ஆற்றினர்.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி. தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி. உருத்திரலிங்கம், டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்திய கலாநிதி ‘காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் அ. உமாமகேஸ்வரன் உள்ளிட்ட ஆறு சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கரு ஜயசூரிய நிகழ்வில் கலந்துகொள்ளாத காரணத்தால், அவருக்கான விருதை அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான நவீன் திசாநாயக்க பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, ‘வரலாற்றை மாற்றியவன்’ என்ற புகழாரத்துடன் ‘கம்பன் புகழ்’ விருது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த கு. அண்ணாமலை இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Related Articles

Back to top button